ஒரு ஐப்பசி மாதம் மாலை நேரம். மழை பொழிந்து எங்கும் மண்வாசனை வீசிக்கொன்ட்டிரு ்க, காந்தள் மலர் போல தூறல் மெதுவாய் விழுந்துகொண்டு இருந்தது. கருமேகங்கள் மழையாய் கரைந்துபோக, வானம் லேசாய் வெளுக்க ஆரம்பித்தது. பறவைகள் வேகமாய் தன் கூடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தன . தேய்பிறை நிலவு வெண்மேகங்களின் உள்ளே இருந்து எட்டி பார்த்தபடி தயங்கி தயங்கி வெளியே வந்தது.

ஆறுகள் வந்து சங்கமிக்கும் கடல் போல , நெடுஞ்சாலையில் வந்து இணையும் ஒரு தொடர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். சாலையில் வரிசையாய் தெருவிளக்குகள் ஒன்றன் பின்னால் ஒன்றாக பழுத்த மஞ்சள் நிறத்தில் எரிந்துகொண்டு இருந்தது. ஈசல் பூச்சிகள் விளக்கை வட்டம் இட்டபடி இருந்தன. வெறிச்சோடி கிடந்தது சாலை. காக்கைகளும் குருவிகளும் அதன் கூட்டுக்கு சென்று சேர்ந்திருக்கும். எங்கும் நிசப்தம். ஒன்று இரண்டு தவளைகள் மட்டும் தனக்குள் ஏதோ பேசி கொண்டாடிக்கொண்டு இருந்தன அந்த பொழுதை.

அவன் சாலையை பார்ப்பதும் , தெருவிளக்கை பார்பதும்மாய் இருந்தான். எரிந்து கொண்டு இருந்த தெருவிளக்கில் ஒன்று மட்டும் தீடிரென்று விட்டு விட்டு எரிய துவங்கியது. உலகின் நகர்வுகள் புரியாமல் இயல்பாக அவன் அதை பார்த்தப்படி நின்றுகொண்டு இருந்தான். மின்னும் வெளிச்சதில் ஏதோ ஒரு உருவம் வருவதை உணர்ந்து பார்வையை திருப்பினான்.

நட்சத்திரங்கள் மின்னுவதுபோல மின்னும் தெருவிளக்கின் அருகே ஒரு நிழல் பூமியில் பட , ஏக என்ன ஓட்டங்கள் வழிந்து ஓட, அங்கேயே பார்த்த படி இருந்த அவன் கண்ணுக்கு ஒரு பெண் முகம் தென்பட்டது. அவன் நின்று கொண்டு இருந்த பேருந்து நிலையத்தை நோக்கி அவள் வந்து கொண்டு இருந்தால். காரணம் ஏதும் அறியாமல் அவன் இதயம் இயல்பை விட வேகமாய் துடித்து கொண்டு இருந்தது.

மழை நனைத்து வைத்த ஈர பூமியில் அவள் மட்டும் வெத வெதப்பாய் வந்து நின்றால். மாலையில் பூத்த மல்லிகையாய் அவள் முகம் பளிச்சென்று இருந்தது. ஏனோ கண்களில் மட்டும் ஒரு பதட்டம். அவள் கால் விரல்கள் அவள் காலணியை இருக்க பற்றி கொண்டிருக்க, கை விரல் நகங்களை பற்கள் மேய்ந்து கொண்டு இருந்தது. வழக்கமாய் போகும் வாகனத்தை தவறவிட்டதாலும் வழக்கமாக செல்லும் நேரத்தை விடுத்து இன்று தாமதம் ஆனதாலும் , அந்த தவிப்பு அவள் உடல் நடுக்கத்தில் இருந்தது.

இதற்கு முன்பு பலமுறை அவன் அவளை பார்த்து இருகின்றான். இருவரும் ஒரே இடத்தில தான் பணி ஆற்றுகிறார்கள். இருவரும் சந்தித்ததுண்டு ஆனால் பேசியதில்லை. இருவருக்கும் உள்ள ஈர்ப்பு மட்டும் இருவருமே அறிவார்கள். தயக்கம் தடை போட்ட காரணத்தால் பேசியதில்லை. இல்லை இல்லை பேச துணிச்சல் வந்ததில்லை.

அவனை அங்கு கண்டதும் ஏதோ இனம் புரியாத தெம்பு மட்டும் அவள் முகத்தில் மலர்ந்தது. அப்படியே நிசப்த்தமாய் பத்து நிமிடம் கடந்தது. எந்த அசைவுமே இல்லை, தவளையின் சத்தத்தை தவிர. சட்டென ஒரு தொலைபேசி அழைப்பு, உறைந்து கிடந்த அவன் உயிர் பெற்று தொலைபேசியை கையில் எடுத்தான். மறுமுனையில் அம்மா போலும், பேருந்து கிடைக்கவில்லை, காத்து கொண்டிருகின்றேன் என்று சொல்லி , தங்கை வந்து விட்டாளா என்று விசாரித்தபடி முடித்தான். அவன் உரையாடலை தள்ளி நின்று கேட்ட அவள் உளரீதியான வலிமை அடைந்ததை போல் உணர்ந்தாள்.

தூரத்தில் ஒரு ஷேர் ஆட்டோ அந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி வருவதை உணர்ந்த அவன் அதில் ஏறி புறப்பட தயார் ஆனான். அவள் செய்வது அறியாமல் திகைத்து நின்றால். ஆட்டோ அவர்கள் நிற்கும் நிறுத்தத்தில் வந்து நின்றது. அவன் உள்ளே ஏறி அமர்ந்தான். ஆட்டோவில் ஓட்டுனரை தவிர்த்து வேறு யாரும் இல்லை. தயக்கத்தோடு நின்ற அவளை பார்த்தான். அவன் இருக்கும் ஒரே நம்பிக்கையோடு அவளும் ஆட்டோவில் அடி எடுத்து வைத்தாள். இருவரும் எதிர் எதிரில் அமர்ந்து இருந்தார்கள். ஆட்டோ நகர ஆரம்பித்தது. அவனை பொறுத்தவரை அது மிதக்க துவங்கியது .

சாரல் மழை லேசாக துரிகொண்டு இருந்தது. ஆட்டோ ரேடியோ வில்

“தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ
(தாழம்பூவே வாசம் வீசு…)”

என்ற பாடல் ரீங்காரம் இட, குலுங்கி செல்லும் ஆட்டோவில் அவன் கிறங்கி கிடந்தான். அவள் கட்டிருந்த புடைவை வாசம் காற்றோடு கலந்து அவனை அடித்து சாய்த்தது. பேசவேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓயாமல் உறுத்த, வார்த்தை வராமல், தவித்தபடி செத்துக்கொண்டு இருந்தான். கண்ணாடி தொட்டியில் இருந்து தாவி தரையில் விழுந்து தவழும் மீன் போல, அவன் மனம் துடித்து கொண்டிருந்தது. அரைமணி நேர பயணம் முடியும் தருணம் வந்தது. அடுத்த நிறுத்தம் அவன் இறங்க வேண்டியதை உணர்தும்விதம் அவன் தயார் ஆனான். சட்டென அவள் முகத்தில் ஒரு தவிப்பு, படபடப்பு பற்றிக்கொண்டது.

ஆட்டோ அவன் நிறுத்தத்தில் வந்து நின்றது. கீழே இறங்கி அவள் முகத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தான். அப்படி ஒரு பயம் அவள் முகத்தில் பீறிட்டு கிடப்பதை பார்த்து கலங்கினான். அவன் இருக்கும் தைரியத்தில் தான் அவள் ஆட்டோவில் ஏறினால் என்பதை உணர்ந்தான். அடுத்த நொடியே தயக்கம் இல்லாமல் மீண்டும் ஆட்டோவில் ஏறினான். லேசாக அவள் கண்களால் சிரித்தால். இல்லை இல்லை கண்களால் அவனை ஒரு முறை அணைத்து கொண்டாள்.

மீண்டும் ஆட்டோ நகர துவங்கியது. சரியாக அடுத்த நிறுத்தம் அவள் இறங்க வேண்டிய இடம் என்பதை முன்பே அவன் அறிந்திருந்தான். அடுத்த நிறுத்தத்தில் ஆட்டோ நின்றது. இருவரும் இறங்கினார்கள், தனி தனியே ஒட்டுனரிடனம் பணம் கொடுத்தார்கள். ஆட்டோ நகர துவங்கியது. சாலையில் இருவர் மட்டுமே நின்று கொண்டு இருந்தார்கள். தூவானம் தூவிகொண்டிருந்தத . அவள் தன் கையில் இருந்த குடையை விரித்து, ஈரம் படர்ந்த சாலையில் நடக்க துவங்கினால். அவன் நனைந்த படியே நின்று கொண்டு இருந்தான். நான்கு அடி எடுத்து வைத்த அவள் திரும்பி அவனை பார்த்து கண்களால் நன்றி சொல்லி , உதடுகளால் புன்னகை செய்தால். அவள் சாலை முனையை கடக்கும் வரை அவன் அதே இடத்தில நின்றிருந்தான்.

மெல்ல மெல்ல அவள் உருவம் இருளில் கலந்து போனது. அவன் திரும்பி அதே சாலையில் சாரல் மழையோடு நினைவுகளை அசைபோட்டுக்கொண்ட நடந்தான். அந்த அரைமணி நேரம் அவன் கண்களின் மீண்டும் மீண்டும் ஆயிரம் முறை வந்து போனது. பேசி இருக்கலாமா ? அவள் ஏன் வாய் திறந்து ஒரு நன்றி கூட சொல்லவில்லை ? நான் ஏன் அவளுக்காக மீண்டும் ஆட்டோவில் ஏறினேன் ? மறுமுறை பார்க்கும்போது அவள் என்னுடன் பேசுவாள ? இன்று மட்டும் ஏன் எங்களுடன் சேர்ந்து யாரும் பயணிக்கவில்லை ? என பல கேள்விகளை அவனுக்குள்ளே கேட்டுக்கொண்டு நகர்ந்தான். மழை பெய்து ஊரே குளிர்ச்சியாய் இருக்க அவனுக்குள்ளே மட்டும் வெக்கை அடிக்க இரவு தூக்கம் பிடிக்கவில்லை.

மறுநாள் மாலை அதே நேரத்தில் வானம் தூவிக்கொண்டு இருந்தது. அவன் இன்றும் காத்து கொண்டு இருந்தான். ஆனால் பேருந்துக்கு இல்லை. அவள் வருகைக்கு. நேற்று போல் இன்றும் அவன் சாலையை பார்ப்பதும் , தெருவிளக்கை பார்பதும்மாய் இருந்தான். நேற்று மின்னிய தெருவிளக்கு இன்று நன்றாக எரிந்து கொண்டு இருந்தது. தூவிக்கொண்டு இருந்த சாரலில் விரும்பியே நனைந்து கொண்டு இருந்தான்.

எரிந்து கொண்டு இருந்த தெருவிளக்கில் ஒன்று மட்டும் தீடிரென்று விட்டு விட்டு எரிய துவங்கியது. இம்முறை உலகின் நகர்வுகளை அறிந்தவன் போல் உற்சாகம் அடைந்தான். மின்னும் வெளிச்சதில் அதே உருவம் குடை பிடித்தபடி வந்து கொண்டு இருந்தது. இம்முறை வாகனத்தை தவறவிடலை, தெரிந்தே வாகனத்தை விட்டால் என சொன்னது அவள் நடை. இரயில் தொலைவில் வரும்போதே தண்டவாளத்தில் அதிர்வு ஏற்படுவது போல அவன் இதயம் அதிர துவங்கியதை உணர்ந்தான் .சாரல் மழை பெய்து கொண்டிருந்தது, அவன் அருகில் மெதுவாய் அவள் வந்து நின்றால். அவன் மழையில் நனைந்துகொண்டு இருந்ததால் குளிரில் கைகளை கட்டிக்கொண்டு இருந்தான். அவள் முகம் பார்க்க தைரியம் இல்லாமல் மின்னிக்கொண்டு இருந்த தெருவிளக்கை பார்த்து கொண்டு இருந்தான். திடீரென்று அவன் மேல் மட்டும் மழை துளி விழுவது நின்று போனது போல் உணர்ந்து மேலே பார்த்தன். தலைக்கு மேல் கார்மேகம் போல குடை விரிந்து இருந்தது. அடுத்த நொடி மின்னிக்கொண்டு இருந்த தெருவிளக்கு சரியா எரிய துவங்கியது. அவனுக்கும் சேர்த்து அவள் குடை பிடித்தபடி நின்றிருந்தால். அவன் மேல் தூறல் விழுவது நின்றுவிட்டது, அனால் நாணம் தூவ துவங்கிவிட்டது. வார்த்தைகள் ஏதும் இன்றி அவர்கள் பேசத்துவங்கி விட்டார்கள். இப்போது அவள் முகம் மின்னிக்கொண்டு இருக்கின்றது !!!
-----கதையாசிரியர்: ஆர்.பாரதிராஜா