காலை, 9:00 மணிக்கே, கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் பரபரத்துக் கிடந்தது. பத்து மணிக்கு, பிளஸ் ௨ ரிசல்ட். மாணவ, மாணவியர் தங்களின் நகங்களை கடித்தபடி தவியாய் தவித்துக் கிடந்தனர். நிற்பதற்குக் கூட இடமில்லாமல், சாலை முழுவதும் இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமித்திருந் ன.
ஹரியும், பிரவீணும் அவசரமாய் வண்டியை நிறுத்திவிட்டு, சென்டருக்குள் நுழைந்தனர். அவர்களுக்கு தங்களுடைய ரிசல்ட்டை விட, பரத் ரிசல்ட்டை பார்க்க வேண்டும் என்பதில்தான், ஆர்வம். அவன், ஒரு சப்ஜெக்ட்டிலாவது பெயிலாக வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசை.
''ஹரி... உனக்கு, ஆயிரத்தி நூறு வந்திரும்ல,''என்று, அவன் தோள்களில், கை போட்டபடியே கேட்டான் பிரவீண்.
''அதெல்லாம் ஈசியா வந்திடும் மச்சான். கெமிஸ்ட்ரி பேப்பர்ல, சென்டம் அடிச்சுட்டா கொஞ்சம், 'கெத்'தா இருக்கும். அதான் மனசு, 'படபட'க்குது,''என்றா ன் ஹரி.
''நீ பராவாயில்லடா. நான் தான் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல, ஒரு கேர்லெஸ் மிஸ்டேக் செய்துட்டேன். ஆனா, மத்த மூணு பேப்பர்லயும் கண்டிப்பா சென்டம் வாங்கிருவேன்.''
பெருமையடித்துக் கொண்டான் பிரவீண்.
''ஏண்டா பிரவீணு... உன் ரிசல்ட் தான் உனக்கு தெரியுமே... அப்புறம் எதுக்கு ரிசல்ட்ட பாக்க இவ்வளவு தவிக்கறே... உன் ஆளு, எவ்ளோ, 'ஸ்கோர்' செய்துருக்கான்னு தெரியணும்... அதானே!''
கண் சிமிட்டியபடியே கேட்டான் ஹரி.
''ஏய்... ஏண்டா இப்படி குல்பி ஐஸ் சாப்பிடுற நேரத்துல, குரங்கை ஞாபகப்படுத்தற,'' என்ற பிரவீண், தன் முகத்தில் வெளிப்பட்ட வெட்கத்தை மறைக்க முடியாமல் தவித்தான். அவர்களின் கண்கள், கூட்டத்தில் பரத்தை தேடிக் கொண்டிருந்தது.
''என்னங்கடா கனவுல மிதந்துகிட்டு இருக்கீங்க... ரிசல்ட் வந்திருச்சி... 'சி' குரூப் அங்கிதா தான், ஸ்கூல் பர்ஸ்ட். போயி சீக்கிரம் பிரின்ட் அவுட் எடுத்துகிட்டு வாங்க,''என்று சொன்னாள், ரிசல்ட் பேப்பரோட வந்து கொண்டிருந்த அவர்கள் வகுப்பு மாணவி ஒருத்தி.
உடனே இருவரும் பிரவுசிங் சென்டருக்குள், தங்கள் ரிசல்ட்டை, பிரின்ட்-ஆவுட் எடுக்க சென்றனர்.
பிரின்ட் அவுட்டோடு வெளியே வந்த ஹரி, ''மாப்ள... நான் நெனச்ச மார்க், அப்படியே வந்திருக்குடா,''என றான்.
''மச்சான்... நான் உன்னை விட, ஐஸ்ட் ரெண்டு மார்க் அதிகம்,'' என்றான் பிரவீண். இருவரும், கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்தியவுடன், வீரர்கள் கைகளை தட்டுவதைப் போல தட்டி, ஒருவரையொருவர் கட்டிக் கொண்டனர்.
''மச்சான் மறந்தே போய்ட்டமே... பரத் என்னடா ஆனான், அவனெ ஆளையே காணோம்,''என்று கேட்ட பிரவீண், கூட்டத்தில், எங்காவது தென்படுகிறானா என்று, தேடிப் பார்த்தான்; ஹரியும் சுற்றிலும் பார்த்தான். எங்கும் காணோம்.
''மாப்ள... பரத்தைக் காணோம்டா.''
''வாடா... கேபின்ல இருக்கானான்னு போய் பார்ப்போம்.''
மறுபடியும், கூட்டத்தில் இடித்து நெருக்கி, உள்ளே போய் கம்ப்யூட்டர் சென்டர் கேபினில் தேடிப் பார்த்தனர்.
''எக்ஸ்யூஸ்மீ சார்... எங்க பிரண்ட் பரத் வந்தானா,'' என்று, கம்ப்யூட்டர் சென்டர் மேலாளரிடம் கேட்டான் ஹரி.
''யாரு... உங்க கூடவே கொஞ்சம் ஒல்லியா சுத்திட்டு இருப்பானே அவனா... அவன் அரை மணி நேரத்திற்கு முன்னாடியே, ரிசல்ட்ட வாங்கிட்டு போய்ட்டானே.' '
''அவனோட மார்க்க பாத்தீங்களா சார்?''
''சாரி பிரதர் பாக்கலயே!''
''பாஸ் செய்திட்டானா, அதாவது தெரியுமா?''
''அதெல்லாம் கவனிக்கல தம்பிகளா.''
''நாம நெனச்ச மாதிரி, அவனுக்கு ஏதோ, ஒரு பேப்பர் ஊத்திக்கிடுச்சுன னு நெனைக்கிறேன். இல்லன்னா ஏன் அவ்வளவு ரகசியமா யாருக்கும் தெரியாம ஓடியிருக்கணும்.''
ஆருடம் சொன்னான் பிரவீண்.
''மொபைல்ல அவன கூப்பிட்டுக் கேளுடா,''என்றான் ஹரி.
தன் மொபைலில், பரத்தின் மொபைல் எண்ணை அழுத்தினான் பிரவீண். 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது.
''ஹரி... 'ஸ்விட்ச் ஆப்'ன்னு வருதுடா.''
''அவனோட எக்சாம் நம்பர், தெரியுமாடா?''
''தெரியலயே மாப்ளே...''
''உனக்கு, உன் ஆளு நம்பரத் தவிர, வேற யாரு நம்பரும் தெரியாது,''என்று திட்டிய ஹரி, ''சரி வண்டிய எடு; நேர்லயே அவன் வீட்டுக்கு போய் பாத்துட்டு வந்துடலாம்,'' என்றான்.
இரண்டு பேரும், பரத் வீட்டுக்கு கிளம்பினர்.
பரத், ஹரி, பிரவீண் மூவரும், ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். ஹரி, பிரவீண், இரண்டு பேரும் படிப்பில் டாப்பர்ஸ்; பரத், அப்படியே நேர் எதிர். ஆனாலும், எல்லா தேர்விலும் கனக்கச்சிதமாக, ஜஸ்ட் பாஸ் வாங்கி விடுவான். கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைதான். ஆனாலும், இதுவரை கரணம் தப்பியதே இல்லை. தேர்ச்சி பெற்று விடுவான்.
இந்த அதிசயத்தில், அசந்து போய்தான், அவனுக்கு நண்பர்கள், 'பார்டர் மார்க் பரத்' என்று, நாமகரணம் சூட்டியிருந்தனர்.
'இந்த நிலைமை ரொம்ப ஆபத்தானது பரத்...' என்று, எல்லா ஆசிரியர்களுமே பரத்தை எச்சரித்தனர்.
'பரத்... நீ சின்சியரான பையன்னு தெரியும். இருந்தாலும், நாப்பது மார்க் அளவுக்காவது நீ படிக்கணும். முப்பத்தஞ்சு மார்குலேயே நிக்கறது, ரொம்ப ஆபத்தானது. ஒரு கேள்வி அடிவாங்கினா அஞ்சு மார்க் அவுட்...' என்று, ஆங்கில பாட ஆசிரியர் பரத்தை கூப்பிட்டு, எச்சரித்துள்ளார்.
படிப்பில் தான் இப்படி; பரத்தின் இன்னொரு முகம் ஆச்சரியமானது.
ஆறாம் வகுப்பிலிருந்து, இன்று வரை இவன் தான் லீடர். வகுப்பில் இருக்கும் நாற்பது பேரையும், இடத்தை விட்டு நகராமல் பார்த்துக் கொள்வதில் படு கில்லாடி.
ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில், வகுப்பறையை அவ்வளவு அமைதியாகப் பார்த்துக் கொள்வான். கோபத்தை முகத்தில் காட்டியபடி, அவன் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டும் போது, ஒட்டு மொத்த வகுப்பும், 'கப்சிப்' ஆகிவிடும். வரம்பு மீறி நடந்து கொள்ளும் மாணவர்களை போட்டு வாங்கி விடுவான். அதனால், மாணவர்களில் பலர், இவன் மீது எப்போதும், 'காண்டா'வே இருப்பர்.
'பாஸ் செய்றதுக்கே... உனக்கு மல்லுக்கட்டி போகுது; நீயெல்லாம்... லீடரா? என்ன கொடுமைடா இது...' என்று, பல மாணவர்கள் இவனிடம் நேரடியாக மோதியிருக்கின்றன ்.
'படிச்சு பாஸ் செய்தா போதும் தம்பிகளா... எவனும் மார்க்கை மட்டும் வச்சிகிட்டு, மாடிவீடு கட்ட முடியாது. பரீட்சையில் எத்தனை மார்க் எடுக்கறோம் என்பது முக்கியமில்ல, பர்பாமென்ஸ்தான் முக்கியம். நீங்க எல்லாம் என்னைவிட, பல மடங்கு மார்க் எடுக்கறீங்க, ஆனாலும் என்ன, அஞ்சு வருஷமா நான்தானே உங்களுக்கு லீடர்; இப்ப சொல்லு எது முக்கியம்ன்னு... பரீட்சையில பாஸ் செய்றதா, வாழ்க்கைல பாசாகறதா...' என்று, 'பஞ்ச் டயலாக்' பேசுவான் பரத்.
'உன் ஆட்டமெல்லாம், இந்த பத்தாம் வகுப்போட முடிஞ்சிருச்சி மச்சி. பிளஸ் 1, பிளஸ் 2வில் உன்னோட பாட்சா பலிக்காது. ஏன்னா, பத்தாம் வகுப்புல நான்தான் ஸ்கூல் பர்ஸ்ட் வருவேன். அதனால, நான்தான் கிளாஸ் லீடரா இருப்பேன்...'
இரண்டு ஆண்டிற்கு முன், பரத்திடம் சவால் விட்டான் ஹரி.
'மார்க் வேணா, உன்கிட்ட இருக்கலாம்; ஆனா, நான் தான் லீடரா இருப்பேன். அந்தத் திறமை என்கிட்டதான் இருக்கு, பார்ப்போமா?'
பதில் சவால் விட்டான் பரத்.
ஹரி சொன்னது மாதிரியே, அவன்தான் ஸ்கூல் பர்ஸ்ட்! அதனால், பிளஸ் 1ல், அவன்தான் கிளாஸ் லீடர்.
ஆனால், இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், ஒட்டுமொத்த மாணவர் களுக்கே, பள்ளி மாணவர் தலைவராக பரத்தை தேர்ந்தெடுத்தார், தலைமை ஆசிரியர்.
'பரத், நீ தான், மாணவர் தலைவனுக்கு தகுதியானவன்; படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினா, நீ இன்னும் நல்லா வரலாம்...' என்றார்.
'மார்க் வேண்ணா... நீ எடுத்திருக்கலாம், ஆனா, நான்தான், உனக்கும் மேல லீடர் பாத்தீயா...'
சவாலை வெற்றி கொண்ட மகிழ்ச்சியில், ஹரியின் முன் வந்து நின்றான் பரத்.
சவாலில் தோற்றுப் போனதை ஒத்துக்கொண்டு, பரத்தோடு கை குலுக்கினான் ஹரி.
இருந்தாலும், பரத்தின் ஏதாவது ஒரு தோல்விக்காக காத்துக் கிடந்தனர் ஹரியும், பிரவீணும். அவனுடைய தோல்வியை, ஏதாவது ஒரு ரூபத்தில் கண்டு ரசிக்க வேண்டும் என்பதுதான், இவர்களின் கனவு.
ஆனால், பரத்திற்கு நாளுக்கு நாள் பள்ளிக்கூடத்தில் மதிப்பு கூடிக்கொண்டுதான் இருந்தது. அந்த ஆண்டு நடந்த, பள்ளி ஆண்டு விழாவின் போது, பரத்தின் பணியை எல்லாரும் பாராட்டினர். தனக்கு கீழ், பத்து தன்னார்வ தொண்டு மாணவர்களை வைத்து, மாணவர்களை கண்காணித்தான். அதுமாதிரிதான், கல்விச்சுற்றுலா சென்ற போதும், மாணவர்களிடம் எந்த பிரச்னையும் வராமல் வழி நடத்தினான். அந்த ஆண்டு நடந்த, என்.சி.சி., கேம்ப்பிலும் பரத் டீமிற்குத்தான் முதல் பரிசு.
எல்லாவற்றிலும் ஏறுமுகமாகவே சென்று கொண்டிருந்த பரத், சறுக்கி விழுவதற்கான, ஒரே வாய்ப்பு பொதுத் தேர்வுதான்.
நிச்சயமாக, பிளஸ் 2 பொதுத் தேர்வில், அவன் தோற்றுப்போய் விடுவான் என்று, இருவரும் நம்பினர்.
'பப்ளிக் எக்சாம்ல கண்டிப்பா பரத் கவுந்திருவாண்டா, அன்னைக்குத்தான், நாம கூடி நின்னு கும்மியடிக்கணும். பாஸ் செய்தாலும் பார்டர்லதான் பாஸ் செய்வான். ஆர்ட்ஸ் காலேஜ்ல கூட சீட் கிடைக்காது. அப்போ, அவன் எதிர்ல நின்னு எகத்தாளமாக சிரிக்கணும்டா...'
ஹரியும், பிரவீணும் ரத்தம் கொதிக்க, அந்த நாளுக்காகத்தான் காத்துக் கிடந்தனர்.
''பரத் மேத்ஸ் பேப்பரை மோசமாதான் எழுதியிருக்கான்; அவன், அந்த பேப்பர்ல நிச்சயம் பெயில் ஆகியிருப்பான். இல்ல பார்டர்ல நிப்பான். நான், அதே கணக்குல சென்டம். என்னோட மார்க் ஷீட்டை, அவன் முன்னாடி காட்டணும். அதைப் பார்த்து அவன், 'காண்டு' ஆகணும்,'' என்று, வெறி பிடித்தவன் போல பேசிக் கொண்டே வந்தான் ஹரி.
வண்டிச் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்து வெளியில் வந்தான் பரத்.
''டேய்... ஹரி, பிரவீண் வாங்க... வாங்க,'' என்று, வீட்டிற்குள் அழைத்துப் போனான் பரத்.
''சாரிடா... ஒரு அவசரமான வேலை இருந்ததால, கம்ப்யூட்டர் சென்டர்ல நின்னுக்கிட்டு இருந்த உங்களை கண்டுக்காம வீட்டுக்கு வந்துட்டேன்.''
உண்மையிலேயே, மன்னிப்பு கேட்டான் பரத்.
''பரத், ரிசல்ட் என்னாச்சு... அதைக் கேட்கத்தான் வந்தோம்.''
''நீங்கதான், எனக்கு பேரு வச்சிருக்கீங்களே.. . 'பார்டர் மார்க் பரத்'ன்னு; அதே ரிசல்ட் தான். எல்லா பாடத்துலயும் பாஸ்; ஆறு பாடத்துலயும் சேர்த்து, மொத்த மார்க் நானூற்றி ஐம்பது. அதிகபட்சம் தமிழ்ல இருநூறுக்கு எண்பத்தி இரண்டு.''
மார்க்கை கேட்டு, 'கலகல'வென சிரித்து விட்டனர் ஹரியும், பிரவீணும்.
''நாங்க இரண்டு பேரும், எவ்ளோ தெரியுமா... ஆயிரத்து நூறுக்கு மேல,'' என்று கூறி, காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் ஹரி.
''நான், சென்னையில தமிழகத்துலயே நம்பர் ஒன் கல்லூரியில மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கப் போறேன். பிரவீண் திருச்சியில இன்ஜினியரிங் கோர்ஸ சேரப் போறான். எங்களை கூப்பிட்டு, 'சீட்' கொடுப்பாங்க; கடைசி வருஷம் படிக்கறப்பவே கேம்பஸ் இன்டர்வியூவில செலக்ட் ஆகிடுவோம். கைநிறைய சம்பளம் வாங்கற, அப்பாயின்மென்ட் ஆர்டரோட தான் வெளியில வருவோம்.''
மூச்சு விடாமல் பேசினான் ஹரி.
''இவ்வளவு கம்மியா மார்க் எடுத்துருக்கியே... மேல என்ன படிக்கப்போற... ஆர்ட்ஸ் காலேஜிலயாவது சீட் கிடைக்குமா?'' நக்கலாக கேட்டான் பிரவீண்.
''நான், மேற்கொண்டு படிக்கற ஐடியாவே இல்லை. எங்க மாமாவோடசேந்து, சென்னைல ஜி-நெட் சொல்யூசன்னு, ஒரு சாப்ட்வேர் கம்பெனி துவங்கப் போறோம். அதுல அஞ்சு பேர் பார்ட்னரா இருக்காங்க. நான் ஒர்க்கிங் பார்ட்னராக இருக்கப் போறேன். அந்த கம்பெனி ஊழியர்களை நான் கோ-ஆர்டினெட் செய்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்க. ஒரு மாசமாவே, அந்த வேலைகளை தான் பாத்துட்டு இருக்கேன்.
''நீங்க சொன்னீங்கல்ல, கேம்பஸ் இன்டர்வியூவில செலக்ட் ஆகிடுவோம். கைநிறைய சம்பளம் வாங்குவோம்ன்னு, நிச்சயமா, 'செலக்ட்' ஆவீங்க. அந்த திறமை உங்ககிட்ட நிறைய இருக்கு. ஆனா, கேம்பஸ் இன்டர்வியூவில உங்களை செலக்ட் செய்ற கம்பெனியின் மேனேஜிங் டைரக்டரா, அன்னைக்கு நான்தான் வருவேன். என்ன நீங்க வேலை செய்யற திறமையோட இருப்பீங்க. நான் வேலை கொடுக்கற திறமையோட இருப்பேன்,'' என்று கூறி, இருவருடைய கைகளையும் பிடித்து வாழ்த்துச் சொன்னான் பரத்.
தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை எல்லாம் எடுத்துக் கொண்டு, பரத்திடம் வேலை கேட்பது போல், ஒரு நிமிடம் கனவு வந்தது இருவருக்கும்.
வெறும் ஏட்டுப் படிப்பிற்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை; திறமைதான், எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று, அந்தக் கனவு உணர்த்துவது போல இருந்தது.

---- தினமலர் (வாரமலர்)